நீரிழிவு நோயைக் ( சர்க்கரை நோய் ) கட்டுப்படுத்துவதில் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இரத்தச் சர்க்கரை அளவைச் சரியான நிலையில் பராமரிக்க, சரியான நேரத்தில் சரியான உணவுகளை உட்கொள்வது மிக அவசியமாகும். என்ன உணவு, எப்போது, எவ்வளவு அளவு உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்வது, இரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணிக்கவும் அதை இயல்பான வரம்பிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இது ஒருவருக்கு ஆரோக்கியமான மற்றும் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளவும், தேவையான தன்னம்பிக்கையை அளிக்கிறது. இந்நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன உணவுகள் சாப்பிடலாம், என்ன உணவுகள் சாப்பிடக் கூடாது என்பது குறித்தும் என்ன சிகிச்சைகள் மற்றும் மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்தும் தெரிந்து கொள்வோம் .
நீரிழிவு நோய் ( Diabetes ) என்றால் என்ன?
நீரிழிவு நோய் ( Diabetes) என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதாகும். அதாவது இன்சுலின் இரத்தக் குளுக்கோஸ் ( இரத்தச் சர்க்கரை) அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். கணையம் போதுமான இன்சுலினைச் சுரக்காதபோதோ அல்லது உடல் சுரக்கப்படும் இன்சுலினைத் திறம்படப் பயன்படுத்த முடியாதபோதோ நீரிழிவு நோய் ஏற்படும். இது காலப்போக்கில் உடலின் பல அமைப்புகளுக்கு, குறிப்பாக நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன. இதில் வகை ஒன்று மற்றும் வகை இரண்டு ஆகியவை மிகவும் பொதுவானவையாகும். மேலும் கவனிக்கப்பட வேண்டிய வேறு சில வகைகளும் உள்ளன.ஒவ்வொரு வகையும் உடலை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது. சில வகைகள் மெதுவாக உருவாகின்றன, அதே சமயம் மற்றவை திடீரெனத் தோன்றுகின்றன.
இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது எப்படி?
நீரிழிவு நோய்க்கான ( சர்க்கரை நோய் ) சிகிச்சையும் மேலாண்மையும் அதன் வகையைப் பொறுத்து மாறுபடும், ஆனால் பொதுவாக பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
- ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு
- இரத்தச் சர்க்கரை அளவைக் தொடர்ந்து கண்காணித்தல்
- வகை 1 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் போன்ற மருந்துகள், மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு வாய்வழி அல்லது ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள்
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் - சமூக ரீதியிலாக ஆதரவு அளிக்க வேண்டும்
- இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்தல்
- ஊனம் மற்றும் மரணத்தைத் தடுப்பதற்காக, கண், சிறுநீரகம், நரம்பு மற்றும் பாதப் பராமரிப்பு உட்பட, சிக்கல்களுக்கான வழக்கமான பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கோள்ளுதல் வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் சிக்கல்களுக்கான வழக்கமான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கலாம் மற்றும் அதன் விளைவுகளைத் தவிர்க்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
நீரிழிவு நோய்- உலக சுகாதார அமைப்பு:
நீரிழிவு நோய் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில்,
நீரிழிவு நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை 1990-ல் 200 மில்லியனிலிருந்து 2022-ல் 830 மில்லியனாக உயர்ந்தது. அதிக வருமானம் கொண்ட நாடுகளை விட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இதன் பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
2022-ல் நீரிழிவு நோயுடன் வாழும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் நீரிழிவு நோய்க்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நீரிழிவு சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகக் குறைவாக இருந்தது.
நீரிழிவு நோய் பார்வையிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கீழ் மூட்டு துண்டிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
2021-ல், நீரிழிவு நோய் மற்றும் அதனால் ஏற்படும் சிறுநீரக நோய் 20 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுக்குக் காரணமாக அமைந்தது. மேலும், இருதய நோய்களால் ஏற்படும் இறப்புகளில் சுமார் 11% உயர் இரத்தச் சர்க்கரையால் ஏற்பட்டன.
ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, இயல்பான உடல் எடையைப் பராமரித்தல் மற்றும் புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்த்தல் ஆகியவை வகை 2 நீரிழிவு நோய் வருவதைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவும் வழிகளாகும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் எப்போது சாப்பிட வேண்டும்?
நீரிழிவு நோய் உள்ளவர்கள் எவ்வளவு இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் தகவல் தெரிவித்திருப்பதாவது,
- நீரிழிவு நோயாளிகள் சீரான இடைவெளியில் உணவு உட்கொள்ள வேண்டும். அவர்கள் மூன்று வேளை உணவும், இடையில் சிற்றுண்டிகளும் கொண்ட உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.
- இன்சுலின் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், சரியான நேரத்தில் உணவை உட்கொள்வதையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
- இன்சுலின் உடலில் வெவ்வேறு கால அளவுகளுக்குத் தொடர்ந்து செயல்படுவதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துபோகும் நிலையைத் தவிர்க்க, உணவுக்கு இடையே நீண்ட இடைவெளி விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. இரவு தூங்குவதற்கு முன் உட்கொள்ளும் சிற்றுண்டி மிகவும் முக்கியமானது; ஏனெனில், இது இரவில் இரத்தச் சர்க்கரை அளவு திடீரெனக் குறைவதைத் தடுக்க உதவுகிறது.
எந்தெந்த உணவுகளைக் கட்டுப்பாடின்றி உட்கொள்ளலாம்?
ரத்தச் சர்க்கரை அளவை உயர்த்தாத உணவுகளான பிளாக் காபி, பிளாக் டீ, சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைச் சாறு, தெளிவான சூப் வகைகள், சாலட்கள், கீரை வகைகள், சர்க்கரை இல்லாத பானங்கள் மற்றும் சுவையூட்டப்பட்ட நீர் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவ்வகை உணவுகளில் மாவுச்சத்து மற்றும் கலோரி அளவு குறைவாக இருப்பதால், இவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான டயட் ( Diabetes diet menu )
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு போதுமான அளவு மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கிய உணவுமுறை ஒரு சமச்சீரான உணவாகும். ஏனெனில் இது நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு மற்றும்சிற்றுண்டி ஆகியவற்றில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.
| நேரம் | உணவு | உதாரண உணவுகள் |
|---|---|---|
| காலை உணவு | முக்கிய உணவு | இட்லி / தோசை / சப்பாத்தி; காய்கறி – 1 கப்; பருப்பு வகை / சாம்பார் – 1 பரிமாறல்; பால் – 100 மி.லி. |
| காலை இடைவேளை | சிற்றுண்டி | பால் – 200 மி.லி. / முளைகட்டிய பயறு – ½ கப் / ஒரு பழம் / நிலக்கடலை / காய்கறி சாலட் |
| மதிய உணவு | முக்கிய உணவு | சாதம்; காய்கறி – 1 கப்; பருப்பு வகைகள் / முட்டை / மீன் / கோழி – தனிநபருக்குத் தேவையான அளவு; தயிர் |
| மாலை இடைவேளை | சிற்றுண்டி | பால் – 200 மி.லி. / முளைகட்டிய பயறு – ½ கப் / ஒரு பழம் / நிலக்கடலை / ஆரோரூட் பிஸ்கட் / அதிக நார்ச்சத்து கொண்ட டைஜெஸ்டிவ் பிஸ்கட் |
| இரவு உணவு | முக்கிய உணவு | சப்பாத்தி; காய்கறிகள் – 1 கப்; பருப்பு வகைகள் / முட்டை / மீன் / கோழி இறைச்சி – தனிநபருக்குத் தேவையான அளவு |
| இரவு நேரச் சிற்றுண்டி | தேவைப்பட்டால் | பால் – 200 மி.லி. / ஆரோரூட் பிஸ்கட் / அதிக நார்ச்சத்து கொண்ட டைஜெஸ்டிவ் பிஸ்கட் |
எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
கேக்குகள், பேஸ்ட்ரிகள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், இந்திய இனிப்பு வகைகள் (லட்டு, ஜிலேபி போன்றவை), ஐஸ்கிரீம்கள், லாலிபாப்கள், சாக்லேட்டுகள், மிட்டாய்கள், வெல்லம் மற்றும் தேன் போன்ற இனிப்புச் சுவை கொண்ட உணவுகளில் 'எளிய சர்க்கரைகள் அதிக அளவில் உள்ளன. இவை உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்கின்றன. எனவே, இவ்வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியமான வாழ்விற்கான குறிப்புகள்
- குறிப்பிட்ட நேரங்களில் உணவருந்துங்கள்
- சமச்சீரான உணவை உட்கொள்ளுங்கள்
- உணவேளைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி விடுவதைத் தவிர்க்கவும்
- 3 வேளை உணவு மற்றும் 3 வேளை சிற்றுண்டி என்ற உணவு முறையைப் பின்பற்றுங்கள்
- அனைத்து வேளை உணவுகளிலும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்
- தினமும் 4-5 பங்கு காய்கறிகளை உட்கொள்ளுங்கள்
- போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் (8-12 டம்ளர் தண்ணீர்)
- தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு ஏன் முக்கியம்?
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம். அதேபோல், எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடும் உதவியாக இருக்கும். நீரிழிவு போன்ற முன்பிருந்தே இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும்போது, அந்த நோய்க்கான கவரேஜ், காத்திருப்புக் காலம், பாலிசி விதிமுறைகள் மற்றும் விலக்குகள் போன்றவற்றை கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சரியான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தகுதியான மருத்துவச் செலவுகளுக்கான நிதிச் சுமையைக் குறைத்து, உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த உதவும்.